Event Details

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் முத்தமிழ் விழாவானது 23&24.09.2024 ஆகிய இரு நாட்கள் மிகச் சிறப்பாக நடந்தது. திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த பெரியோர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் தமிழ்க்கொடி ஏற்றியும் சிறப்பித்தனர். தொடக்க விழாவில் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான திரு பாஸ்கர் பாரதி அவர்கள் கலந்துகொண்டு விழாவினைத் துவக்கி வைத்துப் பேருரையாற்றினார்.

நிகழ்வு 2இல் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் மு. முத்துவேலு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வு 3இல் பேராசிரியரும் செய்தி வாசிப்பாளருமான முனைவர் கவிதா அவர்கள்  “மாற்றம் உன்னில் இருந்து” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வு 4இல் மாணாக்கர்கள் பங்கு பெற்ற விவாத அரங்கம் நடைபெற்றது. இதில்  “அறிவியலின் வளர்ச்சி வேகத்திற்கு ஏற்ப மனித வாழ்வு: வளர்கிறதா? தளர்கிறதா?” என்ற தலைப்பில் மாணவர்கள் வாதிட்டனர். இந்நிகழ்ச்சிக்கு நெறியாளராக சென்னை கிறித்தவக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் டேவிட் பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வு நிகழ்வு 5இல்  மாணாக்கர்கள் பங்குபெற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்  “தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் தமிழ்: நிறைந்திருக்கிறதா? மறைந்திருக்கிறதா ?” என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்விற்கு நடுவராக வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி அமைப்பாளர் சிவ நந்தினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்வு 6ஆவது  நிகழ்வாக இசையரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைச்சுடர் மணி முனைவர் இர. தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கிராமிய இசை நிகழ்ச்சியை வழங்கினார். நிகழ்வு 8இல் “தமிழர் இசை மரபு” என்ற தலைப்பில் கலை வளர்மணி மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு தமிழர் இசை மரபினையும் பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளையும் குறித்துச் சிறப்புரையாற்றினார். நிறைவு விழாவில் கவிதாயினி ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள் கலந்துகொண்டு நிறைவுப் பேருரை ஆற்றினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் அருட்திரு முனைவர் தா. மரிய ஆண்டனிராஜ் அவர்கள் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். கல்லூரியின் இல்லத் தந்தையும் செயலருமான அருட்திரு முனைவர் பிரவீன் பீட்டர் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். அருட்திரு முனைவர் சத்திநாதன், அருட்திரு முனைவர் சண்முகம், கல்வி பிரிவின் துணை முதல்வர்  முனைவர் லூ. ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வினைத் தமிழ்த்துறைத் தலைவர் (சுழற்சி-1) முனைவர் கி பார்த்திபராஜா மற்றும் தமிழ்த்துறை தலைவர் (சுழற்சி-2) முனைவர் ம. சரளாதேவி ஆகியோர் வழிகாட்டலில் தமிழ் மன்றத் தலைவர் (சுழற்சி-1) முனைவர் ஆ. பிரபு மற்றும் தமிழ் மன்றத் தலைவர் (சுழற்சி-2) முனைவர் ஜெ. ஜெயசித்ரா மற்றும் தமிழ் மன்றச் செயலர்கள், இணைச் செயலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக நடத்தினர்.